புதன், 14 அக்டோபர், 2009

இலங்கையில் என் தமிழன் நிலை…

இலங்கையில் என் தமிழன் நிலை…



தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வீரப்பாடல் படித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டன. தமிழன் என்று சொன்னாலே தலை போய்விடுமோ என்ற அச்சம்தான் இப்பொழுது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவிக்கிடக்கின்றது. அங்கே நம்மின மக்கள் சிங்களவர்கள் மத்தியில் அவர்களைப் போலவே வேடமிட்டு வாழ்ந்து வருவதைக் கண்டு உள்ளம் கொதி......

தமிழன் என்று சொன்னாலே ‘விடுதலை புலி’ என்று சந்தேகப்பட்டு இராவணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிடுவதாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் கூறினர். மேலும் தமிழர்கள் சொத்துகளை இலங்கை அரசு அபகரித்துக்கொள்கிறது எனவும் குற்றம் சாட்டினர். தாய்மொழி பேசவும் அஞ்சி சிங்களம் பேசி, சிங்களவர்கள் போலவே பொய்யான வாழ்க்கை முறையைப் பெரும்பாலானத் தமிழர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன.

வாகனங்கள் வைத்திருக்கும் தமிழர்களைக் குடும்பத்தோடு வாகனத்தோடு எரித்து விடும் சிங்களவர்களின் வெறியாட்டத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். இதனாலேயே வாகனம் வைத்திருக்கும் தமிழர்கள் அதனை விற்றுவிட்டு வேறு வாடகை வண்டியில் பயணம் செய்கின்றனர். தமிழ்ப்பெண்கள் பொட்டு வைக்கவும் அஞ்சுகின்றனர். கோயிலுக்குச் செல்லும் பெண்கள் கூட இட்ட குங்குமத்தை கோயில் வளாகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே அழித்துவிடுவதையும் கண்டேன்.

இனி என்ன சமாதானம் பேசினாலும் இலங்கையில் தமிழர்கள் வாழ்வது ஆபத்தானது என்றே தோன்றுகிறது. சிங்களவர்களின் இனவெறி எல்லையைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அமைதியைப் போதிக்கும் புத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர்களால் எவ்வாறு மிருங்களைப் போல் செயல்பட முடிகின்றது என்பதுதான் தெரியவில்லை. தமிழர்கள் கடைத்தெருவிற்குப் போவதற்கும் அஞ்சுகின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பிடித்துச் செல்லப்படுவர்கள் மீண்டும் வீடு திரும்புவதில்லை. சிங்கள இளைஞர்கள் நம் தமிழ் இளைஞர்களை வேண்டுமென்றே உசுப்பேற்றி வம்பிழுக்கும் பழக்கமும் அங்கே தோன்றியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அவர்கள் ஆண்பிள்ளைகளே ஆயினும் வீடு திரும்ப தாமதம் ஆனால் கலவரம் அடையும் நிலை. சென்ற பிள்ளை உயிரோடு வருவானா இல்லை ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொள்வானா என்றே ஒவ்வொரு பெற்றோரும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர்.

வெளியே செல்லும் பிள்ளைகளிடம், யாராவது வம்புக்கு இழுத்தாலும் அமைதியாக வாருங்கள்; சிங்களவன் உங்களை அடித்தால் அடியை வாங்கிக்கொள்ளுங்கள். திருப்பி அடித்துவிடாதீர்கள்.. இது அவர்கள் நாடு. தற்போது நாம் இருக்கும் நிலைமையில் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிச் சொல்லி அனுப்புகின்றனர்.

தங்கள் பிள்ளைகளை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதே அங்குள்ள பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பம்.. தங்களுக்கு என்ன நேரிட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறும் போதே குரல் தழுதழுக்கின்றது.. அதற்காக பல இலட்சம் வெள்ளிகளை செலவழிக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக்கொண்டு பல ஏஜென்சிகள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றிவிடுவதும் உண்டு. இவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கின்றது.
என்ன செய்யப் போகிறார்கள் எப்படி வாழப்போகிறார்கள் என்றே தெரியவில்லை.

பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பணப்பற்றாக்குறையால் தவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே போவதாக பலர் சலித்துக்கொண்டனர். இந்நிலையில் இலங்கையில் வசிக்கும் நமது தமிழர்களின் நிலை விடை தெரியா புதிராகவே இருக்கின்றது.

பண வசதி உள்ளவர்கள் எப்படியாவது வெளிநாட்டிற்குச் சென்று பிழைத்துக்கொள்கின்றனர். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? எப்படி வாழப் போகிறார்கள்? அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்?
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். எப்படியாவது உதவ வேண்டும்!

தமிழ் இனத்தின் எதிர்காலம் சூன்யமாக கண் முன்னே தோன்றித் தோன்றி மறைகின்றது!

._.___
.
I am just posting a message from an email created by someone else.
No copyright infringement intended!